Friday, 18 March 2016

மாற்று இணையதள பக்கத்தில்- குறியீடு – குறும்படம் / அலசல் கட்டுரை.

குறியீடு – குறும்படம் / அலசல் கட்டுரை 

                                         இணையதள பக்கத்தில் வெளிவந்த  கட்டுரை

27 நிமிடங்கள் மனிதன் பேசும் மொழிகளில் எந்த மொழியில்  இருந்தும் ஒரு வார்த்தை கூட பயன்படுத்தாமல் ஒரு குறும்படம்.
உங்களிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது, உங்களிடம் பேசினால் என்ன நடந்துவிடப்போகிறது… என்று யாரையோ சவுக்கால் அடிப்பதற்காகவே படம் முழுவதும் மொழியை, வார்த்தைகளை இயக்குநர் தவிர்த்திருப்பார் போல.
படத்தின் பெயர் குறியீடு. படம் முழுவதும் குறியீடுகள் தான். அந்தக் குறியீடுகளை பார்வையாளர்களின் வசதிக்கு விட்டு விட்டு, உங்கள் பாடு நான் அது தான், இது தான் என்று எதையும் சொல்லமாட்டேன் என்கிறார் இயக்குநர் வினோத்.
காதல், காதலைத் தடுத்தல், அல்லது காதலை வதைத்தல், வதைத்து அழித்தல்… இது தொடர் நிகழ்வாகவே இருக்கிறது. கேட்பாரின்றி அலையும் அந்த உயிர் வெறியர்கள் கெட்டு அழுகி வாசம் வீசும் இந்த சமுகத்தின் குறியீடு.
காதலை அழிக்க, வதைக்க எது காரணம், சாதியா, மதமா, பணமா, வறட்டுக் கௌரவமா… எது என்று நீங்களே முடியு செய்து கொள்ளுங்கள், என்கிறது குறியீடு.
எதிராக நிற்பது சாதியோ, மதமோ எதுவாக இருந்தாலும், எதிர்த்து நில். சிதைக்கப்பட்ட எத்தனையோ காதல்களின் சார்பாக, வதைக்கப்பட்ட எத்தனையோ காதலர்களின் சார்பாக… பழி தீர்த்து பலி கொடுக்க வேண்டிய கடமை உனக்கு இருக்கிறது என்பதைக் குறியீடாகக் குறியீடு சொல்வதாகக் கூட எடுத்துக்கொள்ள முடியும்.


உங்களுக்காக சாதி வராது, உங்களுக்காக மதம் வராது, உங்களுக்காக ஊர் வராது, உங்களுக்காக அரசியல் வராது…. என்பது தான் கடந்த காலங்களின் சாட்சியாக இருக்கிறது எனில்…. உங்களுக்காக நீங்களே கை கோர்த்துக்கொள்ளுங்கள்.
பாதிக்கப்பட்ட காதலர்கள் இணையுங்கள், பாதிக்கப்படாதவர்கள்… இனிமேல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இணையுங்கள்… காதலர்களுக்கு காதலே துணை, காதலர்களே துணை… என்பதைக் குறீயீடாகக் கொண்டாலும் தவறில்லை.
கடவுள், தெய்வம், சாமி…. எந்தக் கணக்கிலும் கொள்ள முடியாத ஒரு அக்றிணைப் பொருளாக குறிக்கப்படுவதாக நினைத்தாலும் தவறில்லை. அல்லது, கடவுள், நன்மை தீமை எல்லாவற்றையும் மௌனமாக கவனித்துக்கொண்டிருக்கிறார் என்றும் எடுத்துக்கொள்ளலாம்,
கதையின் முதன்மை பாத்திரமாக நடித்திருப்பவர், தான் மிகச்சிறந்த கலைஞன் என்பதை தன் முகமொழியாலும் உடல் மொழியாலும் உறுதிப்படுத்துகிறார்.
பைத்தியக்காரியாக நடித்திருக்கும் பெண், ஒரு பெருங்கதையின் வலியாக, அதன் நினைவாக தான் இருப்பதை, நம்ப வைக்கிறார்.
maxresdefaultபடத்தின் மொத்த கதாபாத்திரங்களும் அவர்கள் படமாக்கப்பட்டுள்ள விதமும், இது படம் என்பதைத்தாண்டி உண்மை நிகழ்வாகப் பார்க்க வைக்கிறது.
படமாக்கியுள்ள களம், அல்லது நிலம்… அன்பு வறண்டு போன இந்த சமுகத்தின் குறியீடாகவே தோன்றுகிறது.


இயக்குநர் வினோத் மிஸ்ரா, சிறந்த திரைக்கதையாளனாக கதை சொல்லியாக இருக்கிறார். அவரின் கதை சொல்லலலுக்கு மிக அழகாக உதவி இருக்கிறார்கள், ஒளிப்பதிவாளரும் படத்தொகுப்பாளரும் இசையமைப்பாளரும்..
குறைகள் இருக்கலாம், அது உங்களுக்கு தெரியலாம், தெரியாமல் போகலாம், ஆனால் குறைகளைத் தேடி அலையவோ, வரிசைப்படுத்தவோ கண்டிப்பாக ஆசையில்லை.
குறியீடு, சொல்ல வருகிற குறியீடுகளுக்காக, அந்த குறியீடுகளின் பின்னால் உள்ள கோபத்திற்காக, அந்தக் குறியீடுகளை வைத்து எழுப்பப்படும் கேள்விகளுக்காக….
குறியீடு குறும்படத்தை நான் கொண்டாடவே ஆவலுறுகிறேன். அனைத்து நடிகர் நடிகையர் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் இயக்குநர் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி நிறைந்த வாழ்த்துக்கள்.
பேசாமலே, ஒரு பேரழிவை, ஒரு பேரிழிவைக் குறியீடாகப் பேசுகிறது, குறியீடு. அந்தக் குறீயிடு என்ன என்று தெரிந்து கொள்ள நீங்களும் பாருங்கள்.
–    முருகன் மந்திரம்


No comments:

Post a Comment

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...