Friday, 18 March 2016

குறியீடு விமர்சனம்- 6

குறியீடு விமர்சனம்- 6

நான் இயக்கிய குறியீடு படம் குறித்து யுவபுராஸ்கர் என்ற இளம் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அபிலாஸ் சந்திரன் அவர்களின் பதிவில் இருந்து.



நண்பர் வினோத் மிஸ்ரா தான் எடுத்த “குறியீடு” குறும்படத்தின் இணைப்பை எனக்கு பார்ப்பதற்கு அனுப்பி இருந்தார். சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்த குறும்படமாய் அது இருந்தது. Spaghetti Western ஸ்டைலில் எடுத்திருந்தார். களம் நம்மூர் கிராமம் ஒன்று. நிறைய வெட்டவெளி, கடும் வெயில் படம் முழுக்க வருகிறது. கீழிருந்து மேலாக வானைக் காட்டும் ஷாட்கள், வட்டமிடும் பருந்து, அதன் அச்சுறுத்தும் ஒலி என படம் முழுக்க வருகிறது. படம் பார்க்க துவங்கி கொஞ்ச நேரத்தில் எனக்கு பரதனின் “தாழ்வாரம்”, The Good, the Bad, and the Ugly நினைவுக்கு வந்தன.

படத்தில் வசனமே இல்லை. அதாவது பேசுகிறார்கள். அதை பின்னணி இசை மூலம் மறைத்து விடுகிறார்கள். வசனம் இல்லாமல் விறுவிறுப்பாக காட்சிகளை கொண்டு போகிறார். ஒரு காதல் ஜோடி, அவர்களை பிரித்து கொல்ல முயலும் பெண்ணின் அம்மாவும் உறவினர்களும், அவர்களுக்கு என்னாகிறது என்பது தான் ஒற்றை வரி. கதைக்குள் மூன்று காலங்களை கோர்த்திருப்பது என்னை கவர்ந்தது. படம் துவங்கும் போது காதலனுக்கு தான் தன் காதலியின் வீட்டாரால் தாக்கப்பட்டு அவளும் கொல்லப்படுவதாய் கனவு வருகிறது. அவன் பதற்றமாய் தூங்கி விழிக்கிறான். காதலியை தேடிப் போய் அவளை அழைத்துக் கொண்டு பைக்கில் ஊரை விட்டு தப்பிக்க முனைகிறான். பிறகு எல்லாம் கனவில் போன்றே நடக்கிறது. ஆனால் ஒரு சின்ன மாற்றத்துடன். இதே போல் பெற்றோரால் காதலன் கொல்லப்பட்ட ஒரு பெண் அந்த பாழடைந்த வெளியில் பைத்தியமாய் திரிகிறாள். அவள் இந்த ஜோடியிடம் தன் வாழ்கைகதையை நடித்துக் காட்டும் இடம் அபாரமாய் வந்திருக்கிறது. எனக்கு ஷோபா ஷக்தியின் ”பாக்ஸ் கதைப்புத்தகம்” நினைவு வந்தது. கனவு, அந்த ஜோடி, அந்த பைத்தியப் பெண் என மூன்று காலங்கள் ஊடுபாவும் இடம் நன்றாய் வந்திருந்தது. படத்தின் முடிவு மட்டுமே அதிருப்தியாய் இருந்தது.


வினோத் மிஸ்ராவுக்கு காட்சிபூர்வ ஆளுமை இருக்கிறது. கதையினூடே இயக்குநர் தெரிகிறார். இது முக்கியம். அவரால் வெகுஜன ஊடகத்திலும் வெற்றி பெற முடியும் எனத் தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி தோழர் நான் அபிலாஸ் சந்திரன் அவர்களுக்கு.

No comments:

Post a Comment

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...