Monday 3 October 2016

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் A. மலைச்சாமி B.A, B.L., அவர்களின் வீரவரலாற்று வாழ்க்கை சுருக்கம்.

பாரதீய தலித் பேந்தர் இயக்கத்தின் நிறுவனர், வழக்கறிஞர் A. மலைச்சாமி B.A, B.L., அவர்களின் வீரவரலாற்று வாழ்க்கை சுருக்கம்.

பிறப்பு :
மதுரை, அவனியாபுரம் பெரியார் நகரில் வசித்து வந்த திரு.அழகப்பன் திருமதி.இருளாயி தம்பதியருக்கு, 1954 ஆம் வருடம் மார்ச் மாதம் 11 ஆம் நாள் மகனாய் பிறந்தார்.

கல்வி :
ஆரம்பக் கல்வியை அவனியாபுரம் ஆரம்பப் பாடசாலையிலும் பள்ளிப் படிப்பை மதுரை தெற்குவாசலில் உள்ள கார்ப்பரேசன் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்று, 1973 ஆம் ஆண்டு பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். அதன் பிறகு மதுரை வக்போர்டு கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்து, 1981 ஆம் ஆண்டு மதுரை சட்டக் கல்லூரியில் சேர்ந்து, 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரை வழக்கறிஞர் சங்கத்தின் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.

திருமணம் :
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் தேதி சீர்திருத்த முறைப்படி, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தலைமையில், திருமணம் புரிந்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 1986 ஆம் ஆண்டு மகன் பிறந்தான்.

சமுதாய ஈடுபாடு :

பள்ளிப் பருவத்திலேயே சமுதாய ஈடுபாடு கொண்டவராக திரு.மலைச்சாமி அவர்கள் விளங்கினார்கள். பள்ளி மாணவர்களோடு இணைந்து தான் வாழும் பதிக்குத் ‘‘ தந்தை பெரியார் நகர் ’’ என்ற பெயரை வைப்பதற்கு அரும்பாடுபட்டவர். இளமைப் பருவத்தில் தந்தி பெரியார் அவர்களின் கொள்கையினால் ஈடுபாடு கொண்டு தீண்டாமைக் கொடுமைகளைக் கடுமையாக எதிர்த்து பிரச்சாரமும் செய்து வந்தார். பிற்காலத்தில் அறிவர். அம்பேத்கார் அவர்களின் சிந்தையில் தன்னை இணைத்துக் கொண்டு தலித் மக்களின் விடுதலையில் அதிக நாட்டமுடையவராக வாழ்ந்து வந்தார். கல்லூரியில் படிக்கும் போது அனைத்துக் கல்லூரி மாணவர்களோடு இணைந்து ‘‘ தாழ்த்தப்பட்ட மலைவாழ் மாணவர் அமைப்பு’’ என்பதினை ஏற்படுத்தி,தாழ்த்தப்பட்ட மாணவர்களின் பிரச்சனைகளை உலகிற்கு எடுத்துரைத்தார். மாணவர்களை சமுதாயப் பிரச்சனைகளில் ஈடுபட வைத்தார். மாணவர்கள் தங்களின் பிரச்சனைகளில் மட்டும்
போராடாமல் சமுதாயப் பிரச்சனைகளிலும் போராட வேண்டும் என்ற உயர்ந்த கருத்தினை மாணவ உலகிற்கு முதன் முதலில் புகுத்திய பெருமை திரு.மலைச்சாமியையே சேரும். தன்னுடைய மாணவப் பருவத்தில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டித் தாலுகா, மாணிக்கம்பட்டி என்ற கிராமத்தில், 17.1.1983 அன்று சாதி இந்துக்கள் வாழும் பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் தண்ணீர் எடுத்தார்கள் என்பதினால் காட்டு ராசா என்னும் தலித் இளைஞனை மிருகத்தனமாக சாதி இந்துக்கள் வெட்டிக் கொன்றார்கள். இந்த மிருகத்தனமான செய்கைகளைக் கண்டித்தும், கொலை செய்யப்பட்ட காட்டு ராசாவுக்கு நீதி கோரியும் திரு.மலைச்சாமி அவர்கள் அல்லும் பகலும் பாடுபட்டு 1983, பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி மதுரை கட்டபொம்மன் சிலையிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரை சுமார் பத்தாயிரம் பேருக்கும் மேலாக கலந்து கொண்ட கண்டனப் பேரணியை ஒழுங்கு செய்து அப்பேரணிக்குத் தலைமை தாங்கியும் சென்றார். மதுரை மாநகரமே குலுங்கியது.


தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்கு முதன் முதலில் போராட்ட வடிவில் குரல் கொடுத்தவர் என்ற சிறப்பும் திரு.மலைச்சாமியையே சேரும். அனாதையாய் விடப்பட்ட சமுதாயம் என்பதனை மாற்றி உணர்வுள்ள சமுதாயம், உணர்ச்சியுள்ள சமுதாயம் என்பதினை மதுரை மாநகருக்கு உணர்த்தியவர் திரு.மலைச்சாமிதான். இப்போராட்டம் மதுரை தலித் மக்களின் வாழ்வில் ஒரு புதிய திருப்பத்தை உருவாக்கியத. இப்போராட்டம் முழுமையும் மாணவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களை சரியான பாதையில் வழிநடத்த்தியவர் மலைச்சாமி என்பதற்கு இப்போராட்டமே சாட்சி.

பாரதீய தலித் பேந்தர் இயக்கத்தில் திரு.மலைச்சாமி :


புகைப்பட தரவு :  [தமிழ் நாட்டில் டிசம்பர் 6 1982 ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் சாதி ஒழிப்பு மாநாடு நிகழ்வில் பாரதீய தலித் பேந்தர் அரசியல் இயக்கம் தமிழ் நாட்டின் மதுரை மண்ணில் தன்னை 10,000 நபர்களோடு பிரகடனப் படுத்தி தன்னை நிறுவிக்கொண்டு இன்று விடுதலை சிறுத்தையாக அறுவடை செய்யப்பட்டுள்ளது .

* புகைப்படகுறிப்பு :1982 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் அதில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் துணைவியார் சபிதா அம்பேட்கர், திருமிகு .ராம்தாஸ் அத்வாலே(மகாராஷ்டிரா DPI அமைப்பு நிறுவனர்), திருமிகு மலைச்சாமி (தமிழ் நாட்டு DPI அமைப்பு நிறுவனர் ), திருமிகு விஜயராம் (வழக்கறிஞர்) அண்ணன் திருமாவளவனை DPI அரசியல் இயக்கத்திற்கு அறிமுகம் செய்தவர்.
திருமிகு.ராமராஜ் (ரயில்வே) மற்றும் திருமிகு முத்துகிருஷ்ணன் (பதிவுத்துறை).

*குறிப்பு: தமிழ் நாட்டு "முதல் சாதி ஒழிப்பு மாநாடு" தேக்கம்பட்டி பாலசுந்தரராசு அவர்களின் தலைமையில் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் என்ற வரலாற்று பதிவும் பொறிக்கப்பட்ட ஆவணமே].


முதலில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர் அமைப்பு என்ற பெயரில் செயலாற்றி வந்த திரு.மலைச்சாமி அவர்கள், 1983 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி அம்பேத்கார் அவர்களின் துணைவியார் திருமதி.சவீதா அம்பேத்கார் அவர்களின் தலைமையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் சுமார் பத்தாயிரம் பேர் முன்னிலையில் பாரதீய தலித்பேந்தர் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு அந்த அமைப்பிற்கு தமிழக அமைப்பாளராகப் பொறுப்பேற்று, கரும் சிறுத்தைகளின் தலைவனாக சீரும் சிறப்புமாக இயக்கத்தை நடத்தி வந்தார். இயக்கத்தின் சார்பில் அவர் சமுதாயத்திற்கு உழைத்த உழைப்புகள் என்றும் அவர் புகழ் பரப்பும். அவர் இயக்கத்தின் மூலம் போராடிய போராட்டங்கள் பல, அவைகளுக்குள்,

வஞ்சி நகரம் ஆதிதிராவிட இளைஞர் கந்தன் படுகொலையைக் கண்டித்து நடத்திய போராட்டம் :
தீண்டாமைக் கெடுமையை எதிர்த்தான் என்பதற்காக இளைஞன் கந்தனை 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி படுகொலை செய்தனர் சாதி இந்துக்கள். இக்கொடுமையைக் கண்டித்து தளபதி கி. மலைச்சாமி அவர்கள் அக்டோபர் 28 ஆம் தேதி மேலூரில் மிகப் பெரிய கண்டனப் பேரணி ஒன்றினை நடத்தி வஞ்சி நகர கந்தனுக்கு நீதி கேட்டுப் போராடினார்.


மதுரையில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஷி. பாக்கியம் என்பவர் மதுரை மேலவாசலில் வாழ்ந்து வந்தவர். அப்பகுதியில் சாராய வியாபாரம் செய்பவரைக் கண்டித்தார் என்பதினால் 9.3.1988 அன்று அவர் கடத்திச் செல்லப்பட்டு மிருகத்தனமாக தாக்கப்பட்டு 13.3.1988 அன்று மரணம் அடைந்தார். இச்செய்தி தெரிந்ததும் திரு.மலைச்சாமி அவர்கள் உடனடியாக இப்பிரச்சனையில் ஈடுபட்டு ஏழை ஷி. பாக்கியத்திற்கு நீதி கேட்டுப் புறப்பட்டார். சமூக நீதிக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் போராடிய வீரர் பாக்கியத்திற்கே இந்த நிலை என்றால் இந்திய நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று சொல்லி மார்ச் மாதம் 30 ஆம் தேதி மிகப் பெரிய பேரணியை ஆரம்பிக்கும் போது திரு.மலைச்சாமி எழுப்பிய கோசம் காதில் ஒலிக்கிறது.



தலித் மக்களின் ஒருங்கிணைப்பிற்கு அ.மலைச்சாமியின் பங்கு :

23.7.1983 அன்று மதுரை தெற்கு தாலுக்கா பெருங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஏழை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட பட்டா நிலத்தை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் திரு.கி. மலைச்சாமி ஆற்றிய பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. இன்றைய தினத்தில், தன் பெயர் வரவேண்டும், தன் இயக்கத்தின் பெயர் விளம்பரம் ஆக வேண்டும் என்று எண்ணும் பலர் நடுவே திரு.மலைச்சாமி அவர்கள் சுயநலம் கருதாது ஒருங்ககிணைப்பிற்கு எடுத்துக்காட்டாக இருந்து விஹிஜிகி, சிறுவிவசாயிகள் நல சங்கம், பாரதி தேசிய பேரவை, அம்பேத்கார் மக்கள் இயக்கம், மக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழக மக்கள் முன்னணி, கிராமிய இறையியல் நிறுவனம் ஆகிய இயக்கங்களோடு தன்னை இணைத்துக் கொண்டு போராடி, பெருங்குடி மக்களுக்கு அந்த நிலத்தை பெற்றுத் தந்தார். இன்றும் அம்மக்கள் தலைவர் கி. மலைச்சாமியை போற்றிப் புகழ்கின்றனர்.
தென்னாற்காடு மாவட்டத்தில் வன்னியர் போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட தலித் மக்களின் சார்பாக திரு.கி. மலைச்சாமி வெளியிட்ட சுவரொட்டிகள் தமிழகத்தையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கியது மட்டுமன்றி அவரை கைது செய்யவும் அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் அனைத்தையும் பொருட்படுத்தாமல் சென்னையில் தலித் தலைவர்கள் ஒருங்கிணைந்து நடத்திய ஊர்வலத்தில் தன்னை இணைத்துக் கொண்டு என்றும் தலித் மக்களின் ஒருமைப்பாட்டுக்கு என் ஆதரவு உண்டு என்று பறைசாற்றினார்.

3.8.1989 அன்று உசிலம்பட்டி வட்டம் உத்தப்புரத்தில் நடந்த சாதி கலவரத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு சார்பாக அனைத்து தலித் இயக்கங்களோடு இணைந்து போராடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரு.கி. மலைச்சாமி அவர்கள், இந்திய அளவிலே தலித் மக்கள் ஒருங்ககிணைக்கப்பட வேண்டும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவராகவும், அதற்கான முயற்சிகளில் தளராமல் ஈடுபடுவராகவும் இருந்து வந்தார். அவருடைய சொல்லும் செயலும் ஒருங்கிணைப்பை மையப்படுத்தியே அமைந்திருந்தது.

ஆகாய விமான நிலையத்தில் Dr.அம்பேத்கார் சிலை :
தலித் மக்களின் தலைவர் அறிவர். அம்பேத்கார் அவர்களுக்கு மதுரை மாநகரில் முதலில் சிலை அமைத்த பெருமை திரு.மலைச்சாமியையே சாரும். பல இடர்பாடுகளுக்கிடையில் சாதி வெறியர்களின் மிரட்டுதலுக்கு அஞ்சாமல் தலைவரின் சிலையை அமைத்தார். இதில் அவருக்கு பெரும் இழப்பு அநேகம். இருப்பினும் தான் நினைத்ததை முடித்துக் காட்டுபவராக திரு.மலைச்சாமி அவர்கள் திகழ்ந்தார்கள். தலித் மக்களின் விடுதலையை தன் வாழ்வில் காண வேண்டும் என்றும் வைராக்கியம் அவருடைய சொல்லில், செயலில் வெளிவரும்.

Dr.அம்பேத்கார் கல்வி கழகம் Regds.No.161/85.

இந்த கல்விக் கழகம் திரு.மலைச்சாமியின் எண்ணங்களை வெளிக்காட்டும் அமைப்பாகவும் அவரின் இலட்சியத்தை பறைசாட்டும் அமைப்பாகவும் செயல்பட்டது. அதன் நோக்கங்களில் சில . . .

* தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக உழைப்பது

* தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கு எளிதில் கல்வி கிடைக்க செய்து கல்வியின் பயனை மக்களுக்கு எடுத்துக் கூறி கல்வி கற்க தூண்டுவது.

* கல்வ கற்க வசதியில்லாத மாணவர்களுக்கு அனைத்து ரீதியிலும் கல்வி வசதி பெற உதவுவது.

* வேலைக்காக மனு செய்யும் மாணவர்களுக்கு தேர்வுகள் மற்றும் நேர்முகப் போட்டிக்காகப் பயிற்சி கொடுப்பது.

* தமிழகத்தின் மேல்நிலைப்பள்ளி மற்றும் S.S.L.C.யில் முன்வரும் தலித் மாணவர்களுக்கு பரிசு அளித்து தலித் மாணவர்களை படிப்பில் ஊக்குவிப்பது.

* பிறப்பில் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் சுரண்டப்பட்டு வரும் சுரண்டலை ஒழித்து தாழ்த்ப்பட்ட மக்களின் விடுதலை காணும் பொருட்டு கல்வி ரீதியில்.அவர்களுக்கு பயிற்சி கொடுப்பது போன்றவை.

இக்கல்விக் கழகத்தை திரு.மலைச்சாமி அவர்கள் அண்ணல் அம்பேத்கார் அவர்களின் நினைவு நாள் டிசம்பர் 6 ஆம் தேதி 1985 ஆம் ஆண்டு தொடங்கினார். தன் வாழ்வு முழுவதையும் தலித் மக்களின் விடுதலைக்காகவே அர்ப்பணித்த ஒப்பற்ற தலைவன் திரு.மலைச்சாமி அவர்கள்.

திரு.மலைச்சாமி அவர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு கடைசியாக 18.6.1989 முதல் 28.6.1989 வரை நுழைவுத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பினை தலை சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு நடத்தியது மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.
ஒருவேளைச் சோற்றுக்கே வழியில்லாத தாழ்த்தப்பட்ட மக்கள்,உழைத்திடவே ஒரு வேலை இல்லாத தாழ்த்தப்பட்ட மக்கள்,குடிசைகளும், மரப்பொந்துகளிலும் வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்ட மக்கள்,உடல் மெலிந்தாலும் வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்ட மக்கள்,தினந்தோறும் கொல்லப்படுகின்ற தாழ்த்தப்பட்ட மக்கள்,
இப்படிப்பட்ட நம் மக்களின் விடுதலையில் முழு மூச்சாக ஈடுபட்டு தலித் மக்களின்க நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த மாவீரன், தன் உடல், உயிர், ஆவி அனைத்தையும் தலித் மக்களின் விடுதலைக்காகவே கொடுத்த திரு.கி. மலைச்சாமி அவர்கள், 14.9.1989 அன்று தலித் மமக்களை தவிக்கவிட்டு இயற்கை எய்தினார்.

தலைவன் தலித் மக்களின் விடுதலைக்காக விட்டுச் சென்ற பாதையில் நாம் நம்மை இணைத்துக் கொண்டு செயலாற்றுவோம்! இதுவன்றோ நாம்

மலைச்சாமிக்கு சமர்ப்பிக்கும் அஞ்சலி!
உறுதி கொள்வோம் விடுதலை அடைய!
உறுதி கொள்வோம் விடுதலையை நம் ஆயுளில் காண!
உறுதி கொள்வோம் இரத்தம் சிந்தியாவது விடுதலை அடைய!
உறுதி கொள்வோம் ஒன்றுபட
உறுதி கொள்வோம் போராட
உறுதி கொள்வோம் புரட்சி செய்திட!
ஜெய்பீம்!

வாழ்க மலைச்சாமி புகழ்! வளர்க அவர் தம் சேவை!

1 comment:

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...